Thursday, December 24, 2009

பூ

பறிக்காமலே இருந்திருக்கலாமென
யோசித்துக் கொண்டிருக்கையில்...
இதழிதழாய் உதிர்த்துக்கொண்டது
பூ.

வழித்தடங்கள்

என்றைக்காவது
கொள்ளும் கட்டாய
உறக்கங்களை
வந்து கேலி செய்கிறது
உன்
வழித்தடங்கள்...

விழிகள்

வாசல் வழி
செல்பவர் யாரும்
என் விழிகளைக் கண்டால்
சென்று உறங்கச்சொல்லுங்கள்..
இனி யாரும்
வரப்போவதில்லை என்று.

மீதம்

எழுத வேண்டிய கவிதை
இன்னும் மீதமிருக்கிறது.
வாழ வேண்டிய வாழ்க்கை
இன்னும் மீதமிருக்கிறதா?

நாட்காட்டி

தினமும் காலை
பார்வை
கிழிக்கும்
என் தோல்வியில்
நின்று போன
நாட்காட்டி.

இதயம்

ஐவிரல் மடக்கி
நெஞ்சம் தட்டி
அழுதுகொண்டே
இருக்கிறது
உன்னைப்போலவே
உள்ளிருந்து
இதயம்.

நம்பிக்கை

இன்னும்
பத்திரமாயிருக்கிறது
நீ விட்டு சென்ற
நம்பிக்கையும்
காலணியும்.
தொலைந்து போனது
தொடர்புபடுத்திக்கொள்ளும்
அறிவுதான்.

இன்னொரு கவிதை

இன்னொரு கவிதை
எழுதியாக வேண்டும்.
இன்று மட்டும்
இரவல் கொடு.
நாளை உறக்கத்திற்கான
கனவுகளை.

நிசப்தம்

அறை நிரப்பி
வாசலில்
வழிந்தோடும்
நிசப்தங்களை
வாரியிறைக்க
ஒற்றைச்சொல்
கொடு.

ஈழம் “வியாபாரத்தின் வழி”

பலர்
காரியம் செய்தார்கள்.
சிலர் அதை
கவிதை செய்கிறார்கள்.
நாம் அதை
காசு செய்வோம்.

வளையோசை

விரலோடு விரல் சுற்றி
உன் வளை ஒலியெழுப்பும்
சாவி கொத்தின்
சப்தத்தில்
மறந்து போனது
யோசித்து வைத்திருந்த
கவிதை.

இதழ்கள்

என் கவிதை
வரிகளை
முதலில்
பிரசுரிப்பவை
உன்
இதழ்களே.

மேகங்கள்

கடைசி சுவாசத்தின்
வெப்பத்தில்
ஆவியாகி
மேலெழுந்து
எங்கோ தேடித்திரிந்து
நீ வாழும்
நிலப்பரப்பில்
நிழல்பரப்பும்
மேகங்களாய்
நான் சிந்திய
கண்ணீர் துளிகள்.

கவிதை

உனக்கு
கவிதை
வேண்டுமா?
எதையோ எழுதி
உன்னவளை
வாசிக்க சொல்.
அவளுக்கு
கவிதை
வேண்டுமா?
இதையே எழுதி
உள்ளுக்குள்
வாசிக்க சொல்.

நிலை

அதிகாலை எழுந்து
விடியலைப் பார்த்து
நேரங்களை துரத்தி
வெற்றிடம் தவிர்த்து
வேலையில் மூழ்கி
மாலைக்கு காத்திருந்து
மெளனமாய் பேசி
சத்தமாய் சிரித்து
நிம்மதியாய் தூங்கி
வெகு நாட்களாகியிருக்கிறது.

கவிதை

குழந்தையின்
கதறலை
பொருட்படுத்தாமல்
கையிலிருந்த
பொம்மையை
பிடுங்கி செல்கிறாய் நீ.
பாவம்..
கவிதை எழுத தெரியாத
குழந்தை என்ன
செய்யும்?

மறதி

இருகண்களையும்
இமை சுருங்க
இறுக்க மூடி..
தலைகுனிந்து
நெற்றி வருடி..
அலறும் பாடல்,
அசையும் திரைச்சீலை,
அடிக்கும் நாள்காட்டி,
அனைத்தையும்
நிசப்பதமாக்கி..
தேவையே இல்லாமல்
ஓடி வந்து குறுக்கிடும்
எண்ணங்களை
புறந்தள்ளி..
நினைவு புள்ளியை
பின்நோக்கி இழுத்தும்
இன்னும்
நியாபகம் வரவில்லை
முதல் காதலியின்
முகம்.

இடைவெளி

உன்
வார்த்தைக்கு
இடையிலான வெளி
மாதங்களாகி
போயிருக்கிறது..
என்
மெளனங்களுக்கு
இடையிலான மொழி
இல்லாமல்
போயிருக்கிறது.

தனிமை

ஏதும் இல்லாத என்னை
ஏதோ ஒன்று
எப்பொழுதும்
பின் தொடர்கிறது.
ஓடி சென்று
ஒளிந்து கொண்டு
பார்க்கும் என்
முதுகு தட்டி நகைக்கிறது
நீ
விட்டு சென்ற
தனிமை.

காற்று

ஆவேசமாய் பொங்கி,
பெருங்கூச்சலுடன் ஓடி வந்து,
அருகே வர அமைதியாகி,
வெள்ளையாய் சிரித்து,
அடி மண் திருடும்
அலைக்கு அஞ்சி,
இறுக்கிபிடிக்கும்
உன் விரல்களை
தேடுகிறது
என் விரலிடுக்கில்
காற்று.

கடவுள்

உதிர்ந்துபோன
பூக்களை
தலை கவிழ்ந்து
வெறித்துப்பார்க்கிறது
மரம்.
கையில்
புயல் வீசும்
சாமரத்துடன்
கடவுள்.

விடியல்

நடந்தவை அனைத்தும்
கனவாயிருக்கக் கூடாதா
எனும் எண்ணத்தில்
எரிநெய் ஊற்றி
கொளுத்தியபடி
விழிக்கிறது
விடியலுக்கான
சூரியன்.

காத்திருத்தல்

நீ
துடைத்து
தருவதற்காய்
தூசு சேர்த்த
கண்ணாடி,
இன்று
துருப்பிடித்தே
போயிருக்கிறது.

நடந்து செல்லும் கம்பிகள்

இரும்புக் கதவின்
மறுபுறம் நான்.
கடந்து செல்கிறாய்
சாலையில் நீ.
நடந்து செல்கின்றன
பார்வையில் கம்பிகள்..

வாழ்க்கை

அறைக்குள் எல்லாம் என்றும் வடியாத இருள்.
மொழியில் எல்லாம் வெரும் புரியாத பொருள்.
புத்தகம் எல்லாம் இன்னும் எழுதாத கவிதை.
நாட்கள் எல்லாம் ஒன்றும் வாழாத வாழ்க்கை.

மரணம்

கைகளுடன்
விளையாடிக் கொண்டு
தரை நோக்கி தாவும்
கண்ணாடியின் முகத்தில்
கடைசிவரை தெரிவதில்லை
மரணத்திற்கான பிம்பம்.

இதயம்

எழுந்த பின்னும்
அடிக்கும்
அலராங்களைப்போல்
அறிவற்றது
நீ
பிரிந்த பின்னும்
துடிக்கும்
இதயம்.

வாழ்க்கை

கவிதையில்
சரியாய்
பொருந்தி வராத
வார்த்தையை போல
துருத்தி நிற்கிறது
எஞ்சியுள்ள
வாழ்க்கை.

நஷ்டஈடு

தூங்கிப்போன அம்மாவால்
நின்றுபோன தொட்டில்

காற்றுடைத்த
பலூன்களுக்கான அழுகை

காய்ச்சல் தீபாவளியின்
சப்தமில்லாத ஏமாற்றம்

தங்கை பிடித்துக்கொண்ட
ஜன்னலோர இருக்கை

இரண்டே பேருந்து நிறுத்ததில்
இறங்கி போன முதல் காதல்

கல்லூரிக் கடைசியில்
எனைத் தொலைத்த நண்பர்கள்

யாரோ பெயரில் அச்சான
திருட்டுப்போன என் கவிதை

அத்தனைக்கும் நஷ்டஈடாய்
ஒரு வாரமாய் நீ.

கடவுள்

எனை
வீழ்த்துவதற்கான
ஆயுதங்கள்
தீர்ந்து போய்
அடுத்த ஆயுதம்
தயாரிக்கும்
அவசரத்தில்
கடவுள்.

கோலம்

என்
வாழ்க்கை
புள்ளிகளினிடையே
சேராமல்
போடப்பட்ட
கோலம்
நீ.

நத்தினி

சோக முட்கள் வெட்டி விட்டு
சோலை மரங்கள் நட்டவள் நீ

இறக்கை ரெண்டு கட்டிவிட்டு
வெட்டவெளியில் விட்டவள் நீ

ஆயுள் ரேகை அழிந்தபின்னும்
ஆணி வேரில் விழுந்த பனி

பாத ரேகை தேய்ந்த பின்னும்
பயணிக்க உடன் வந்தவள் நீ

காணாமல் போன குயில்
அலைப்பேசியில் பேசும் தொனி

தானாக நான் சிரிக்க
பைத்தியங்கள் தோற்கும் இனி

வாழ்க்கை வற்றிய நேரத்தில்
வானம் தந்த நதி நீ

வாழ வேண்டும் உன்னோடு
வர வேண்டும் நத்தினி

மனசு

அபிநயங்கள் காட்டி
அழகாய் பேசும் உன்னை
இமைக்காமல்
பார்க்கிறது
கன்னத்தில்
கைவைத்து
மனசு.

Saturday, November 11, 2006

உன் நினைவுகள்

உறங்கப்போன போது
கதவுடைந்த சத்தம் கேட்டு,
ஓடி வந்து பார்த்தேன்.
இரைந்து கிடந்தன
விரைந்து வந்த
உன் நினைவுகள்.

- 27-09-2006, 12:56AM

எது கடவுள்?.

இரைந்திருந்த காசுகளை,
வாரிக் கொண்டான்.
வரைந்திருந்த படத்தை,
மிதித்து சென்றான்.
அவன் அறிவான்,
எது கடவுள்?.

ஏன் கடவுள்?

தட்டிலிருந்த காசுகளை,
கொட்டிக் கொண்டான்.
கொட்டியிருந்த சாம்பலை,
தட்டிச் சென்றான்.
அவன் அறிவான்,
ஏன் கடவுள்?

காதல்

விழுந்தவனின் உலகம்,
விழாதவனின் ஏக்கம்,
விழுந்தெழுந்தவனின் பள்ளம்,
அந்த கிணறு.

தனிமை.

நீ இங்கு இல்லாததை,
கேலி பேசி சிரிக்கிறது,
கூட்டமாய் வந்திருக்கும்,
தனிமை.

நடந்தது என்னவென்றால்

நேற்று,
இயேசு சிலுவையில்
அறைவதைப் பார்த்து,
சிரித்து விட்டேன்.

இன்று,
அவன்,
அவளை அனுப்பியிருக்கிறான்.